கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தர்ணா


கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தர்ணா
x

கலப்பட நெல் என்று கூறி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மறுத்ததால் அவர், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள அதனூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 64), விவசாயி. இவர் காணை வட்டார உதவி வேளாண் அலுவலகம் மூலம் தூயமல்லி ரக நெல் விதைகள் 120 கிலோ வாங்கினார்.

பின்னர் அதனை தனது நிலத்தில் சாகுபடி செய்தார். இதன் மூலம் அவருக்கு 240 சாக்கு மூட்டைகளில் 9,600 கிலோ நெல் கிடைக்கப்பெற்றது.

இந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய காணையில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு தண்டபாணி சென்றார். அங்கிருந்த ஊழியர்கள், தண்டபாணியிடம், நீங்கள் கொண்டு வந்த நெல் கலப்பட நெல்லாக இருப்பதால் இவற்றை கொள்முதல் செய்ய இயலாது என்றனர்.

அதற்கு அவர், காணையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகத்தான் பாரம்பரிய நெல்லான தூயமல்லி ரக நெல் விதைகளை வாங்கி பயிரிட்டேன். நல்ல விளைச்சல் ஆகி அறுவடை செய்துள்ள நிலையில் தற்போது கொள்முதல் செய்ய முடியாது என்றால் நான் எங்கு செல்வது என்றார். இருப்பினும் அங்கிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் அந்த நெல் மூட்டைகளை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த அவர், தான் தூயமல்லி ரக விதை நெல் வாங்கிய அந்த பைகளுடன் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், அவர் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரியிடம் மனு கொடுத்தார். அப்போது காணை வட்டார வேளாண் அலுவலகத்தில் நெல் விதைகளை வாங்கி பயிர் செய்தேன். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றபோது கலப்பட நெல் என்றுகூறி அதனை கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். இதனால் எனக்கு ரூ.2½ லட்சம் வரை நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே என்னுடைய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முறையிட்டார். அதற்கு, இதுபற்றி வேளாண் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.


Next Story