மோட்டார் சைக்கிள்-லோடு ஆட்டோ மோதிய விபத்தில் விவசாயி சாவு


மோட்டார் சைக்கிள்-லோடு ஆட்டோ மோதிய விபத்தில் விவசாயி சாவு
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிளும், லோடு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி இறந்து போனார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிளும், லோடு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்த விவசாயி பலியானார். தலைமறைவான லோடு ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

விவசாயி

சாத்தான்குளம் அருகே உள்ள சடையன்கிணறு கீழத்தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் சப்பானி என்ற பாண்டி (வயது 68). விவசாயி. சம்பவத்தன்று இவரும், அவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த வேடமுதலு மகன் ஆண்டியும் (70) மோட்டார் சைக்கிளில் சாத்தான்குளத்துக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆண்டி ஓட்டி சென்றுள்ளார்.

சாத்தான்குளத்தில் பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

விபத்து

பன்னம்பாறை விலக்கிலுள்ள அரிசி குடோன் அருகே வந்தபோது, எதிரே வந்த லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளாகின.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி நேற்று மாலையில் பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் ஆண்டி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

டிரைவருக்கு வலைவீச்சு

இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லோடு ஆட்டோ ஓட்டுனர் லட்சுமணனை தேடி வருகிறார்.


Next Story