பெண்ணாடத்தில் மணல் லாரி மோதி விவசாயி பலி குவாரியை மூடக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
பெண்ணாடத்தில் மணல் லாரி மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மணல் குவாரியை மூடக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம்,
மொபட் மீது லாரி மோதல்
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த அரியராவி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 75). விவசாயி. இவர் நேற்று வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை கடையில் வாங்கிக் கொண்டு பெண்ணாடம் கடைவீதியில் இருந்து மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். விருத்தாசலம்- திட்டக்குடி மெயின் ரோட்டில் தேரடி அருகே சென்றபோது, பின்னால் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பரமசிவம் மீது லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான பரமசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர்கள் மறியல்
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திரண்டு வந்த பரமசிவத்தின் உறவினர்கள் பெண்ணாடம் அருகே சேந்தமங்கலத்தில் இயங்கும் அரசு மணல் குவாரியால் தான் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. ஆகவே அந்த மணல் குவாரியை மூடக்கோரி திடீரென திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.