டிராக்டர் மோதி விவசாயி பலி


டிராக்டர் மோதி விவசாயி பலி
x

பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி விவசாயி பலியானார்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 65). விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர்கள் அர்ஜூனன் (34), லட்சுமணன் (50). நேற்று முன்தினம் இவர்கள் 3 பேரும், ஒரே மோட்டார் சைக்கிளில் ஆத்தூரில் உள்ள வேளாண்மை அலுவலகத்துக்கு சென்றனர்.

பின்னர் வேலையை முடித்துவிட்டு, அங்கிருந்து சித்தரேவு நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அர்ஜூனன் ஓட்டினார். சாகுல்அமீதும், லட்சுமணனும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

சித்தரேவு-சித்தையன்கோட்டை மெயின் ரோட்டில் பட்டிவீரன்பட்டி அருகே ஊத்துவாய்க்கால் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது சித்தரேவில் இருந்து சித்தையன்கோட்டை நோக்கி அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (35) ஓட்டி வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாகுல்அமீது பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அர்ஜூனன், லட்சுமணன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story