உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம் நடந்தது.
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர்களை இளம் தொழில் முனைவோர்களாக ஊக்குவிக்கும் வகையில் உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை தாங்கி பேசுகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அபிவிருத்தி மையத்தினால் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய முடியும். இதற்கு பல்கலைக்கழகமானது பல்வேறு வணிக மார்க்கங்களை ஏற்படுத்தி கொடுக்கிறது என்றார். மாணவர் பணியமர்வு மைய பொறுப்பாளர் ராஜகோபால் வரவேற்றார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உழவர் உற்பத்தி கூட்டமைப்பின் திட்ட ஆலோசகர் வடிவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், குறைந்த செலவில் உற்பத்தியை மேம்படுத்துதல், நிலையான வருமானத்தை சார்ந்த விவசாயத்தை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார். கூட்டத்தில் தேனி மாவட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த மா விவசாயிகள், மாணவர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் மன்ற ஆலோசகர் கீதாராணி நன்றி கூறினார்.