சொத்து தகராறில் விவசாயி குத்திக்கொலை


சொத்து தகராறில் விவசாயி குத்திக்கொலை
x

தென்காசியில் இரவில் சொத்து தகராறில் விவசாயி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது உறவினரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தென்காசி

தென்காசி எல்.ஆர்.சாமி நாயுடுபாளையத்தை சேர்ந்தவர் செந்தில் முருகன் (வயது 41). விவசாயியான இவருக்கும், இவரது உறவினரான வெங்கடேஷ் என்பவருக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் இவர்களுக்கு சொந்தமாக தோப்புகளும் உள்ளன. ஒருவரது தோப்பில் மற்றொருவர் மரங்களை வெட்டுவது தொடர்பாகவும் பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7.30 மணிக்கு செந்தில் முருகன் மருந்து வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் மெடிக்கலுக்கு சென்றார். பின்னர் மருந்து வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். வீட்டின் அருகே வந்தபோது, அங்கு வந்த வெங்கடேஷ், செந்தில் முருகனை வழிமறித்தார். அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக செந்தில்முருகனை குத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே செந்தில் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வெங்கடேஷை வலைவீசி தேடி வருகின்றனர். ெகாலையான செந்தில்முருகனுக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், கவிபாரதி என்ற மகளும் உள்ளனர். தென்காசியில் இரவில் விவசாயி குத்திக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story