யானை மிதித்து விவசாய தொழிலாளி சாவு


யானை மிதித்து விவசாய தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே யானை மிதித்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

சிவகிரி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமாக தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணத்துக்கு மேற்கே வழில்வழி கண்மாய் ஆற்றுப்பகுதி அருகில் விவசாய நிலமும், தென்னந்தோப்பும் உள்ளது. இந்த தோட்டத்தில், தேனி மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த வீர்காளை (வயது 55) என்பவர் தண்ணீர் பாய்ச்சும் விவசாய தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தேவிபட்டணம் பாரதிநகர் தேவர் மேட்டு தெருவில் குடும்பத்துடன் தங்கியிருந்து வந்தார்.

நேற்று காலையில் வீர்காளை வழக்கம்போல் தோட்டத்துக்கு சென்று வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து வெளியே வந்த காட்டு யானை திடீரென்று தோட்டத்துக்குள் புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வீர்காளை கூச்சலிட்டவாறு அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்ட முயன்றார்.

அப்போது மலையடிவாரத்தில் உள்ள அகழி வரையிலும் சென்ற யானை திடீரென்று திரும்பி வந்து, துதிக்கையால் வீர்காளையை தூக்கி வீசி காலால் அவரை மிதித்தது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் ஓடிச் சென்று விட்டது.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில், வன உதவி அலுவலர் ஷாநவாஸ், சிவகிரி வனச்சரகர் மவுனிகா, கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ், புளியங்குடி வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் மற்றும் வனக்காப்பாளர்கள், வனச்சரக பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இறந்த வீர்காளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தேவிபட்டணம் கிராம நிர்வாக அலுவலர் அன்புசெல்வி அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

யானை மிதித்து இறந்த வீர்காளையின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணத்தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்த வீர்காளைக்கு பூமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story