விவசாயியை ஸ்டிரெச்சரில் 1½ கி.மீ. தூரம் சேற்றில் இறங்கி தூக்கி வந்த தொழிலாளர்கள்


விவசாயியை ஸ்டிரெச்சரில் 1½ கி.மீ. தூரம் சேற்றில் இறங்கி தூக்கி வந்த தொழிலாளர்கள்
x

தஞ்சை அருகே வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயி மயங்கி விழுந்தார். அவரை சேற்றில் இறங்கி 1½ கி.மீ. தூரம் ஸ்டிரெச்சரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் தூக்கி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை அருகே வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயி மயங்கி விழுந்தார். அவரை சேற்றில் இறங்கி 1½ கி.மீ. தூரம் ஸ்டிரெச்சரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் தூக்கி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விவசாயி

தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நிலத்தை உழுவது, நாற்றங்கால் தயாரிப்பது, நடவுப்பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் தஞ்சையை அடுத்த ஆலக்குடியை சேர்ந்த விவசாயி ராயப்பன் ஜெயராஜ் (வயது 47) என்பவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள தனது வயலில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு இருந்தார். வயலை உழுவதற்காக தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தார்.

மயங்கி விழுந்தார்

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வயலிலேயே மயங்கி விழுந்தார். இதனைப்பார்த்த அருகில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்படி வல்லத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ்சம்பவ இடத்திற்கு சென்றது. அப்போது மெயின்சாலையில் இருந்து விவசாயி மயங்கி விழுந்த இடம் 1½ கி.மீ. தூரம் ஆகும். மேலும் 1½ கி.மீ. தூரமும் வயல் வெளிகளாக இருந்தது. அவை அனைத்தும் குறுவை சாகுபடிக்காக உழவு செய்து சேறும், சகதியுமாக காணப்பட்டது.

1½ கி.மீ. தூரம் சேற்றில் தூக்கி வந்தனர்

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பானுப்பிரியா, டிரைவர் எரேமியா ஆகியோர் ஆம்புலன்சை சாலை ஓரத்தில் நிறுது்தி விட்டு ஸ்டிரெச்சரை எடுத்துக்கொண்டு சேற்றில் இறங்கியபடி விவசாயி மயங்கி விழுந்த இடத்திற்கு சென்றனர்.பின்னர் உடனடியாக விவசாயிக்கு தேவையான முதலுதவி சிகிச்சையை அளித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த தொழிலாளர்கள் உதவியுடன் ஸ்டிரெச்சரில் தூக்கிக்கொண்டு சேற்றில் இறங்கி நடந்தபடி 108 ஆம்புலன்சுக்கு வந்தனர்.

ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்

பின்னர் அதில் ராயப்பன் ஜெயராஜை ஏற்றிக்கொண்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயியை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் உழியர்களை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story