விவசாயியை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்-போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது
பனவடலிசத்திரம் அருகே விவசாயியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே விவசாயியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய போலீஸ்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 44). விவசாயி.
அதே ஊரைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் செந்தூர்பாண்டியன் (30). இவர் சென்னையில் போலீஸ்காரராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்
நேற்று முன்தினம் இரவில் மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகம் அருகில் இருந்த மாரிமுத்துவை செந்தூர்பாண்டியன் உள்ளிட்டவர்கள் மது குடிக்க வருமாறு கூறி தங்களது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.
அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு மாரிமுத்துவை அழைத்து சென்றனர். அங்கு சென்ற பின்னர் மாரிமுத்துவிடம், ''பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் தலைமறைவான உனது நண்பர் வெளியப்பன் எங்கே?'' என்று கேட்டு அவரை செந்தூர்பாண்டியன் உள்ளிட்டவர்கள் தாக்கினர். பின்னர் மாரிமுத்துவை புளியமரத்தில் கட்டி வைத்தும் தாக்கியதாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தூர்பாண்டியன், அவருடைய நண்பரான துரைப்பாண்டி மகன் வெள்ளத்துரை (43) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி மகன் குமார், உத்தண்டன் மகன் முத்துச்சாமி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.