மனைவியை தற்கொலைக்கு தூண்டிய விவசாயிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பு
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய விவசாயிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே கணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 44) விவசாயி. இவருடைய மனைவி வசந்தமேரி. இவர் கடந்த 24-4-2010-ம் ஆண்டு தனது உறவினர் இறுதி சடங்கிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது பாலகிருஷ்ணன் தனது மனைவியிடம் ஏன் அங்கு சென்று வந்தாய் என்று கேட்டு அவரை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த வசந்தமேரி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வசந்தமேரியை தற்கொலைக்கு தூண்டியதாக பாலகிருஷ்ணன் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து கள்ளக்குறிச்சி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பாலகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து சார்பு நீதிமன்ற நீதிபதி வீரண்ணன் தீர்ப்பு கூறினார்.