மின்னல் தாக்கி விவசாயி- தொழிலாளி பலி
ஆலங்குளம், மானூர் பகுதியில் மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் விவசாயி, தொழிலாளி பரிதாபமாக இறந்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெண்ணிலிங்கபுரம் சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). விவசாயி. இவர் ஆடு வளர்த்து வருகிறார். நேற்று மாலை அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்தது. திடீரென கருப்பசாமி மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்துமலை போலீசார் விரைந்து சென்று, கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் வெண்ணிலிங்கபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் பொன்ணு மகன் மணி. கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மானூர் அருகே உள்ள மடக்குடி ரஸ்தா கிராமத்தில் வேலை செய்தார். மாலையில் வேலை முடிந்து கிளம்பிய நேரத்தில், அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மணி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் விரைந்து சென்று, மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆலங்குளம், மானூர் பகுதியில் மின்னல் தாக்கியதில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.