பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிலிக்கல்பாளையத்தில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம் தமிழக அரசு கொள்முதல் செய்யாததால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்
பரமத்திவேலூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிலிக்கல்பாளையத்தில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வெல்லத்தை தமிழக அரசு கொள்முதல் செய்யாததால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கரும்பு பயிர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம். பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பாண்டமங்கலம், கபிலர்மலை, பொன்மலர் பாளையம் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்புகள் பரமத்திவேலூர் பகுதிகளில் உள்ள 700-க்கும் மேற்பட்ட வெல்லம் தயார் செய்யும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அச்சு வெல்லம், குண்டு வெல்லம், மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்யப்படுகிறது.
இந்த பணியில் ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆலை குடியிருப்பு பகுதியில் தங்கி செய்து வருகின்றனர். இங்கு தயார் செய்யப்பட்ட வெல்லங்களை ஆலை உரிமையாளர்கள் 30 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டி பிலிக்கல்பாளையத்தில் உள்ள விவசாயிகள் வெல்லம் சர்க்கரை விற்பனை சந்தைக்கு கொண்டு செல்கின்றனர்.
வெல்லம் கொள்முதல்
இங்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் ஏலத்தில் தரத்திற்கு தகுந்தார் போல் வெல்லங்கள் ஏலம் விடப்படுகிறது. நாமக்கல், கரூர், சேலம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்து செல்கின்றனர். ஏலத்தில் எடுக்கப்பட்ட வெல்லங்களை வியாபாரிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்புகின்றனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் உள்ள வெல்ல ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பிலிக்கல்பாளையம் வெல்லம் சர்க்கரை ஏல சந்தையில் இருந்து வெல்லத்தை மொத்தமாக கொள்முதல் செய்து வினியோகம் செய்தது.
உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் தயார் செய்யப்படும் வெல்லங்களை அரசு கொள்முதல் செய்யவில்லை. எனவே இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தொகுப்பில் தமிழக அரசு இப்பகுதியில் தயார் செய்யும் வெல்லத்தை கொள்முதல் செய்து வினியோகம் செய்யும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் வெல்லத்தை தமிழக அரசு கொள்முதல் செய்யாததால் கரும்பு விவசாயிகளும், வெல்ல உற்பத்தியாளர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அடுத்து வரும் பொங்கல் பண்டிகையிலாவது தமிழக அரசு வெல்லத்தை மொத்தமாக கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்த்து வழங்க நடவடிக்கை வேண்டும் என வெல்ல உற்பத்தியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விலை உயர்வு
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம், சர்க்கரை விற்பனை சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.11,170-க்கும், வெல்லம் சிற்பம் ஒன்று ரூ.1,180-க்கும் விற்பனையானது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிற்பம் ஒன்று ரூ.1,250 -க்கும், அச்சு வெல்லம் சிற்பம் ஒன்று ரூ.1,250-க்கும் விற்பனையானது
பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.