சிண்டிகேட் அமைத்து தேயிலை கொள்முதலில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு- விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு


சிண்டிகேட் அமைத்து தேயிலை கொள்முதலில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு- விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு
x

தேயிலை கொள்முதலில் சிண்டிகேட் அமைத்து முறைகேடு நடப்பதாக விவசாயிகள் கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி

ஊட்டி

தேயிலை கொள்முதலில் சிண்டிகேட் அமைத்து முறைகேடு நடப்பதாக விவசாயிகள் கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேயிலை உற்பத்தி

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் தேயிலை உற்பத்தி அதிக அளவில் இருந்தது. உற்பத்தி அதிகரித்ததால் விலை குறைந்தது. இதன்படி ஒவ்வொரு இடத்திலும் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது‌. மேலும் தேயிலை கொள்முதல் செய்ய கோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மலை மாவட்ட சிறு விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் கூறுகையில், ஒரே இலை ஒரே விலை என்ற அடிப்படையில் தேயிலை கிலோவுக்கு ரூ.30 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் தலையிட்டால், வர்த்தகர்கள் சிண்டிகேட் அமைத்து தேயிலை தூள் விலையை குறைக்கின்றனர். எனவே தேயிலை தூளை கிலோவுக்கு ரூ.150-க்கு குறையாமல் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகிற செப்டம்பர் 14-ந் தேதி பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

சிண்டிகேட் அமைத்தால் நடவடிக்கை

இந்த நிலையில் நேற்று தேயிலை பிரச்சினை விவாதிக்க ஊட்டி தமிழகம் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த சில நாட்களாக தேயிலை கொள்முதல் விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதை தடுக்க விவசாயிகள் அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் தேயிலை தூள் விற்பனையில் வர்த்தகர்கள் சிண்டிகேட் அமைத்து முறைகேட்டில் ஈடுபட்டால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story