ஏலக்காய் விளைச்சல் குறைவு; விற்பனை பதிவு அதிகமானது எப்படி? நறுமண பொருட்கள் வாரியத்தில் விவசாயிகள் முறையீடு
ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், அதன் விற்பனை பதிவு அதிகமானது எப்படி? என்று நறுமண பொருட்கள் வாரியத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு தமிழக விவசாயிகளுக்கு சொந்தமான 2 லட்சம் ஏக்கர் நிலங்களில் ஏலக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக இடுக்கி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஏலக்காய் செடிகள் பாதிக்கப்பட்டன. கனமழையால் ஏலக்காய் செடிகளில் அழுகல் நோய் தாக்கி மகசூலை பாதித்துள்ளது. இதனால் ஏலக்காய் பிஞ்சுகள் உதிர்ந்தன. மேலும் மழையுடன் வீசிய பலத்த காற்றால் மரங்கள் ஒடிந்து, செடிகள் மீது விழுந்து சேதமானது. ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே இடுக்கி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்திய நறுமண பொருட்கள் விற்பனை வாரியத்தில் தினமும் காலை மற்றும் பிற்பகலில் நடைபெறும் ஏலங்களில் சராசரியாக ஒரு லட்சம் கிலோ ஏலக்காய்கள் விற்பனைக்கு பதிவு செய்யப்படுவது வழக்கம். விளைச்சல் குறையும்பட்சத்தில், ஏலத்திலும் ஏலக்காய் விற்பனை பதிவு குறையும். ஆனால் தற்போது ஏலக்காய் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், நறுமண பொருட்கள் விற்பனை வாரியத்தில் விற்பனைக்கு வழக்கம்போல் ஒரு லட்சம் ஏலக்காய்கள் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டது. இது விவசாயிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது ஏலக்காய் தோட்டங்களில் ஏலக்காய் விளைச்சல் குறைவாக உள்ளது. ஆனால் ஏலக்காய் ஏல மையத்தில் ஒரு லட்சம் கிலோ வரை பதிவு செய்யப்படுகிறது. இதனால் ஏலக்காய் விலை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்திய நறுமண பொருட்கள் விற்பனை வாரியம் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.