அதிகாரிகள் குழுவிடம் விவசாயிகள் கண்ணீர் மல்க முறையீடு


அதிகாரிகள் குழுவிடம் விவசாயிகள் கண்ணீர் மல்க முறையீடு
x

கூத்தாநல்லூர் அருகே தண்ணீரின்றி கருகும் பயிர்களை காப்பாற்ற காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என அதிகாரிகளிடம் விவசாயிகள் கண்ணீர் மல்க முறையிட்டனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே தண்ணீரின்றி கருகும் பயிர்களை காப்பாற்ற காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என அதிகாரிகளிடம் விவசாயிகள் கண்ணீர் மல்க முறையிட்டனர்.

மேட்டூர் அணை திறப்பு

டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய வசதியாக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்குவதற்கு ஆயத்தமாகி வந்தனர்.ஆனால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வெண்ணாறு, வெள்ளையாறு, கோரையாறுகளில் குறைவான அளவில் ஓரிரு நாட்கள் மட்டுமே ஓடியது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் ஆறுகளில் செல்லாததால், வயல்களுக்கு செல்லக்கூடிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் செல்லவில்லை.

குறுவை சாகுபடி

தண்ணீர் திறக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே, மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், பல இடங்களில் விவசாயிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி, கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வெண்ணாறு, வெள்ளையாறு, கோரையாறுகளில் முறை வைத்து தண்ணீர் விடப்பட்டது. இதன்மூலம் பாசன வாய்க்கால்கள் வழியாக சென்ற தண்ணீர் வயல்களை சென்றடைந்ததால், இதனை பயன்படுத்தி கொண்ட அப்பகுதி விவசாயிகள் உழவு பணிகளை செய்து, குறுவை நெற்பயிர் சாகுபடியை செய்தனர்.

காவிரி நீர்

அதன்படி, டெல்டா மாவட்டத்தில் சுமார் 5லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நாளில் இருந்து, விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீரும் கிடைக்கவில்லை. போதிய மழையும் இல்லை. கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடை மடை பகுதி வரை முழுமையாக சென்று அடையாததால், குறுவை நெற்பயிர்கள், முளைத்து வரும் தருவாயில், பல இடங்களில் தண்ணீர் இன்றி காயும் நிலையில் உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ள நிலையில், கர்நாடக அரசும் காவிரி தண்ணீரை தர மறுக்கிறது. இதனால், குறுவை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

கண்ணீர் மல்க முறையீடு

இந்த நிலையில், சில இடங்களில் காய்ந்து வரும்குறுவை நெற் பயிர்களுக்கு விவசாயிகள் நிவாரணம் கேட்க தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன் திருவாரூர் மாவட்டத்தில், குறுவை சாகுபடி நெற்பயிர்கள் நிலை குறித்து ஆய்வு செய்தார். அதன்படி கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், வடகட்டளை கோம்பூர், ஓகைப்பேரையூர் கிராமங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் இறங்கி ஆய்வு செய்தனர். அப்போது, ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம், எங்கள் பகுதியில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பயிர்க கருகி வருகிறது. எனவே கூடுதல் தண்ணீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறினா். இதை கேட்ட அதிகாரிகள் குழுவினர் தகுந்த நடவமடிக்கை எடுப்பதாக கூறினர். ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாருமுத்து எம்.எல்.ஏ. உள்பட பலர் இருந்தனர்.


Next Story