வாழை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்


வாழை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
x
தினத்தந்தி 9 Oct 2023 12:15 AM IST (Updated: 9 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நயினார் கோவில் பகுதிகளில் வாழை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

வாழை சாகுபடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட விவசாயங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் நெல் விவசாயத்தை விட மிளகாய், பருத்தி விவசாயமே மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நயினார் கோவில் அருகே உள்ள பாண்டியூர், மஞ்சகொல்லை உள்ளிட்ட சில கிராமங்களில் வாழை சாகுபடியிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பாண்டியூர் பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் கூறும்போது, நயினார் கோவில் அருகே உள்ள பாண்டியூர், மஞ்சகொல்லை, அரசடி வண்டல் உள்ளிட்ட கிராமங்களில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வாழை விவசாயத்திற்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படுவதுடன் செலவும் அதிகம். போர்வெல் மற்றும் ஆழ்துளை கிணறுகள் போன்ற தண்ணீர் வசதி உள்ளவர்கள் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பருவமழை

அது போல் பாண்டியூர், அரசரடிவண்டல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வாழை இலை தோரணங்கள் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில் திருவிழாக்களுக்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதை தவிர வாழை மரங்களில் காய்க்கும் வாழைத்தார்கள், வாழை இலைகளும் பல ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. பருவமழை சீசனில் நல்ல மழை பெய்யும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டமும் நன்றாக இருப்பதோடு வாழை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

கடந்த ஆண்டு பருவமழை சீசனில் போதிய மழை இல்லாததால் வாழை விவசாயமும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பருவமழை சீசனிலாவது மழை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story