எள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
தரங்கம்பாடி பகுதியில் எள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொறையாறு:
தரங்கம்பாடி பகுதியில் எள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை சாகுபடி
தரங்கம்பாடி பகுதியில் விவசாய தொழிலும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கியமானதாக விளங்கி வருகிறது. விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து, பயறு வகைகள், செங்கரும்பு, சீனிக்கரும்பு, வாழை, நிலக்கடலை, எள், சோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, கேழ்வரகு, புடலை, பாவை, கத்தரி, வெண்டை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும் சீசனுக்கு ஏற்றார் போல் சில இடங்களில் வெள்ளரி, தர்பூசணி ஆகியவற்றையும் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது காழியப்பநல்லூர், பத்துக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியான எள் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வெயில் நீடித்தால் மகசூல் குறையும்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மண் வளத்திற்கு ஏற்ப தேவையான எள் ரகங்களை சாகுபடி செய்து வருகிறோம். சில நேரங்களில் திடீரென மழை பெய்தது ஆறுதலாக இருந்தது. தற்போது வெயில் கடுமையாக இருக்கிறது.
எள் செடிகளில் பூ பூத்து உள்ளது. வெயில் தாக்கம் குறைந்தால் மட்டுமே எள் மகசூல் நன்றாக இருக்கும். கடுமையான வெயில் நீடித்தால், செடிகளில் பூத்துள்ள பூ, காய்கள் உதிர்ந்து விடும். நிலத்தில் தற்போது உள்ள ஈரப்பதத்தால் எள் செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளது என்றனர்.