சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மும்முரம்


சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மும்முரம்
x

கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை

டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்கான ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு முன்னதாக மே 24-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.இதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். ஒரு சில விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ளவில்லை.

சம்பா சாகுபடி

அவ்வாறு, குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ளாத விவசாயிகள், ஒரு போக சாகுபடியாக சம்பா, தாளடி சாகுபடியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு உளுந்து பயறு சாகுபடிக்கு பிறகு வயல்களில் செடி, கொடிகள் சூழ்ந்த நிலையில், அவைகளை அகற்றி மண்ணை சமப்படுத்தும் வகையில் டிராக்டர் மூலம் வயல்களில் உழுது உழவு பணிகளை செய்து வருகின்றனர். அதன்பின்னர், ஈரப்பதம் உள்ள மண்ணை பயன்படுத்தி சம்பா, தாளடி நெல் விதைகளை வயலில் தெளித்து முழுமையான சாகுபடி பணிகளில் ஈடுபட உள்ளனர்.

அதிக மகசூல்

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகையில் கடந்த ஆண்டு குறுவை சாகுபடியின் போது அடிக்கடி மழை பெய்ததால் அறுவடை பணியின் போது மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு ஒரு சில விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில், குறுவை சாகுபடி மேற்கொள்ளாதவர்கள் சம்பா, தாளடி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தெளி விதைகள் தெளித்து சாகுபடி பணிகளை செய்ய ஆயத்தமாகி வருகின்றோம். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பாக சாகுபடி பணிகளை செய்து அதிக மகசூலை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது'இவ்வாறு கூறினர்.


Next Story