நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம் நெல் நாற்றுகளை நடத்தொடங்கினர்
நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தண்ணீர் திறப்பு
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. மேலும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததாலும் பாபநாசம், மணிமுத்தாறு போன்ற அணைகளில் நீர்மட்டம் 65 அடிக்கும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வடக்கு-தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன் கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நாற்று நடும் பணி
இதற்கிடையே, நெல் சாகுபடிக்காக விவசாயிகள் தங்களுடைய வயல்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மாதேவி, பாபநாசம், வீரவநல்லூர் கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் இந்த பணி நடைபெறுகிறது.
நெல் பயிர் நடவு பணி மட்டுமின்றி, நெல் நாற்று பாவும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. சில இடங்களில் கிணறு உள்ள விவசாயிகள் ஏற்கனவே நாற்று பாவி தயார் நிலையில் நாற்று வைத்திருந்தனர். அவர்கள் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதும் நெல் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகம் பேர் கிணற்று பாசனம் உள்ளவர்கள். இவர்கள் ஏற்கனவே நெல் நாற்று பாவி நாற்றுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். தற்போது அந்த விவசாயிகளும் நெல் நடவு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.