உரமிடும் பணியில் விவசாயிகள் மும்முரம்


உரமிடும் பணியில் விவசாயிகள் மும்முரம்
x

அருப்புக்கோட்டை பகுதியில் பரவலாக மழை பெய்ததால் உரமிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பகுதியில் பரவலாக மழை பெய்ததால் உரமிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் கவலை

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக கம்பு, சோளம், ஊடுபயிர்களாக மொச்சை, வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதி விவசாயிகள் பருவமழையை நம்பி ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் விதைப்பு செய்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் விதைப்பு செய்து மழைக்காக காத்திருந்த நிலையில் மழை இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்தநிலையில் தற்போது அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் உற்சாகத்துடன் விவசாய பணியை தொடங்கி உள்ளனர்.

உரமிடும் பணி

தற்போது விளைந்த பயிர்களுக்கு உரமிடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விவசாயி பெருமாள் கூறியதாவது:-

ஆவணி மாதத்தில் விதைப்பு செய்தோம். ஆனால் மழை வருமா, வராதா என்ற ஏக்கத்தில் இருந்தோம். தற்போது மழை பெய்து வருகிறது. ஆதலால் விதைப்பு செய்த நிலங்களில் உரம் இடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல மழை தொடர்ந்தால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து துண்டிப்பு

இந்தநிலையில் கோபாலபுரம் பாலவநத்தம் சாலையில் ரெயில்வே தரைப்பாலத்தில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் விவசாய பணிகளுக்காக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி பாலு கூறுகையில், லேசான மழை பெய்தால் கூட இந்த ெரயில்வே தரைப்பாலத்தில் மழை நீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. நாங்கள் இந்த வழியாகத்தான் வயல்களுக்கு செல்ல வேண்டும். மழைநீர் தேங்கி உள்ளதால் உரங்கள் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் இப்பகுதியில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


Next Story