'குடும்ப பஞ்சாயத்து' நாடகம் நடத்தி விவசாயிகள் நூதன பிரசாரம்


குடும்ப பஞ்சாயத்து நாடகம் நடத்தி விவசாயிகள் நூதன பிரசாரம்
x
தினத்தந்தி 20 July 2023 1:15 AM IST (Updated: 20 July 2023 3:17 PM IST)
t-max-icont-min-icon

விவசாயத்தில் நஷ்டம் என்ற 'குடும்ப பஞ்சாயத்து' நாடகம் நடத்தி விவசாயிகள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

'குடும்ப பஞ்சாயத்து'

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள தும்பிச்சிபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 15-வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட அமைப்புச்செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். இதில் விவசாயம் செய்தால் நஷ்டம் ஏற்படுகிறது என்பதை மையமாக வைத்து 'குடும்ப பஞ்சாயத்து' என்ற நாடகத்தை நடத்தி விவசாயிகள் நூதன பிரசாரம் செய்தனர்.

போராட்டம் நடைபெறும் பந்தலில் திரளாக விவசாயிகள் அமர்ந்திருந்தனர். பஞ்சாயத்து தலைவர் போல விவசாயி ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். மனைவியாக (பெண்) போல விவசாயி ஒருவர் சேலை கட்டி வந்திருந்தார். கணவராக விவசாயி ஒருவர் நின்றிருந்தார்.

விவசாயத்தில் முதலீடு

இதைத்தொடர்ந்து 'குடும்ப பஞ்சாயத்து' நாடகம் தொடங்கியது. என் கணவர் கழுத்தில் அணிந்துள்ள தங்கத்தாலியை கேட்கிறார். இதனால் நான், என்னுடைய குழந்தைகளுடன் எனது தாய் வீட்டுக்கு செல்கிறேன்.

திருமணத்தின்போது எனது தாய் வீட்டில் கொடுத்த தங்க சங்கிலிகள், பணம், ஆடு, மாடுகளை என்னுடைய கணவர் விற்று விவசாயத்தில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்து விட்டார். சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில், தற்போது நஷ்டத்தில் இருக்கிறேன். இந்த சூழ்நிலையில், விவசாயத்துக்கு முதலீடு செய்ய எனது தங்கத்தாலியை கணவர் கேட்கிறார் என்று கூறியபடி பெண் வேடமிட்ட விவசாயி கதறி அழுதார்.

'தாலியை கழற்றி கொடு'

இதேபோல் கணவராக நடித்த விவசாயி, தான் பயிரிட்ட பயிர்கள் மற்றும் அதற்கு ஏற்பட்ட செலவுகள், தனக்கு கிடைத்த வருவாய் குறித்த பட்டியலை பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த பஞ்சாயத்து தலைவர், வேளாண் மற்றும் பால் உள்ளிட்ட பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய விவசாய சங்க நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளிடம் பேசி உள்ளனர். எனவே இனி விவசாயம் செய்தால் நஷ்டம் ஏற்படாத வகையில் நல்ல லாபம் கிடைக்கும். உன் கழுத்தில் மஞ்சள் கயிறை கட்டிக்கொண்டு தங்கத்தாலியை கழற்றி உன் கணவரிடம் கொடு. அவர் அதை அடமானம் வைத்து விவசாயத்தில் லாபம் வந்தவுடன் திருப்பி கொடுத்து விடுவார் என்றார். அதன்பிறகு விவசாயியும், அவருடைய மனைவியும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டு செல்வது போன்ற காட்சி அரங்கேறியது. இந்த நாடகத்தை, போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர் பார்த்து ரசித்தனர்.


Next Story