நெல்லுக்கு விலை கிடைத்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சுற்றிய கிராமங்களில் நெல்லுக்கு நல்ல விலை கிடைத்தும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சுற்றிய கிராமங்களில் நெல்லுக்கு நல்ல விலை கிடைத்தும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நெல் விவசாயம் பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக உள்ளது திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதிதான். மாவட்டத்திலேயே அதிகமான நெல் விவசாய பணிகளை கொண்ட பகுதி ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை பகுதி தான். கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நெல் விவசாயம் முழுமையாகவே பாதிக்கப்பட்டது. இதனிடையே ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சோழந்தூர், சிங்கனேந்தல், மாதவனூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் இந்த ஆண்டு நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு விட்டன.
விவசாய நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்களை அவித்து, காய வைத்து ரைஸ் மில்லுக்கு அரைப்பதற்காக கொண்டு செல்லும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நல்ல விலை
மறுபுறம் அறுவடை செய்யப்பட்ட நெல்களை வியாபாரிகளிடமும் கொடுக்கும் பணியிலும் அரசின் நேரடி கொள்முதல் மையத்தில் வழங்கும் பணியிலும் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல்லுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதாகவே விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சோழந்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, இந்த ஆண்டு மழையே பெய்யாததால் சோழந்தூர் பிர்காவுக்குட்பட்ட ஏராளமான கிராமங்களில் நெல் விவசாயம் முழுமையாகவே பாதிக்கப்பட்டு விட்டன. இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்த நிலையிலும் நெல்லுக்கு நல்ல விலை கிடைத்துள்ளன.
ஏமாற்றம்
டீலக்ஸ் ரக நெல்லுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.300 முதல் 400 வரை விலை உயர்ந்துள்ளது. அதுபோல் ஆர்.என்.ஆர்.சோதி மட்டை உள்ளிட்ட அனைத்து ரக நெல்களுக்கும் இந்தாண்டு நல்ல விலை கிடைத்துள்ளது.
நெல் விளைச்சல் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பல கிராமங்கள் தண்ணீர் இல்லாமல் நெல் விவசாயம் பாதிக்கப்பட்ட அதே நேரத்தில் வைகை தண்ணீர் பாசன வசதி உள்ள பெரும்பாலான கிராமங்களில் இந்த ஆண்டு நெல் விவசாயம் நன்றாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.