நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு


நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள்.

மழையால் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சம்பா பயிரிடப்பட்டிருந்த வயல்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீர் வடிய வழியின்றி நெற்பயிர்கள் பல நாட்களாக தண்ணீரில் மூழ்கி கிடந்ததால் பயிர்கள் அழுகி பாதிப்பு ஏற்பட்டது.

பாதிப்பில் இருந்து தப்பிய பயிர்களை விவசாயிகள் கவனமுடன் பராமரித்து வந்தனர். சில இடங்களிலும் மறு சாகுபடியும் நடந்தது. தற்போது சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. கொள்ளிடம் அருகே உள்ள பழைய பாளையம், தாண்டவன்குளம், அகர வட்டாரம், புதுப்பட்டினம், மாதானம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா அறுவடை பணி நடந்து வருகிறது.

விவசாயிகள் பரிதவிப்பு

ஆனால் பழையபாளையம், மாதானம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. வியாபாரிகளும் வரவில்லை. இதனால் விவசாயிகள் விளைவித்த நெல்லை எப்படி விற்பனை செய்வது? என்ற பரிதவிப்பில் உள்ளனர். பழைய பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களுடைய நெல்லை கொண்டு வந்து விற்பனைக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கொள்ளிடம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து கொள்முதல் பணிகளை தொடங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சம்பத் கூறியதாவது:-

அடுக்கி வைக்க இடமில்லை

புதுப்பட்டினம், தற்காஸ் போன்ற மணல் பாங்கான பகுதிகளில் அதிகளவில் சம்பா சாகுபடி நடைபெற்று, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடையான நெல்லை விற்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள் பலர் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இடமின்றி தவிக்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்த நிலையில் பழைய பாளையம் கிராமத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.

இதனால் விவசாயிகளுடன், சுமை தூக்கும் தொழிலாளர்களும் வேலை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது குறித்து மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story