சணல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்


தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் சணல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் சணல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சணல் சாகுபடி

வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு ஆதனூர், தென்னம்புலம், மருதூர், குரவப்புலம், கருப்பம்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அறுவடை பணிகள் முடிந்த நிலையில் வயலில் இருக்கும் ஈரப்பதத்தை கொண்டு சணல் பயிர் விதைக்கப்பட்டு உள்ளது. இந்த சணல் பயிர் 3 மாதத்தில் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த சணல் சாகுபடி தற்போது பூத்து உள்ளது.

சணல் பயிரில் பூத்துள்ள மஞ்சள் பூ பார்ப்பதற்கு மிக அழகாக காணப்படுகிறது. சணல் பயிர் இயற்கை பசுந்தாள் உரமாக வயல்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் களைகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த சணல் சாகுபடி இன்னும் ஒரிரு மாதத்தில் காய்த்து முற்றிய நிலையில் இதனை வயல்களில் வைத்து விவசாயிகள் உழுது விடுவார்கள். அப்படி செய்வதன் மூலம் அது பசுந்தாள் உரமாக மாறிவிடுகிறது. சணல் பயிருக்கு அதிக செலவு இல்லாமலும், இயற்கை பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது.

மண்ணுக்கு பசுந்தாள் உரமாகவும்..

ஒரு சில விவசாயிகள் முற்றிய சணல் விதையை அறுவடை செய்து ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்கின்றனர். இயற்கை உரமாகவும், செலவு இல்லாமலும் சம்பா சாகுபடிக்கு பின்பு கூடுதல் வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் இப்பகுதியில் சணல்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

அறுவடைக்கு பின்பு சணல் விதைகளை மறு ஆண்டு வயலில் விதைப்பதற்காக சில விவசாயிகள் எடுத்து வைக்கின்றனர். நீர், உரம் இன்றி நன்றாக சணல் பயிர் இந்த மண்ணில் விளைந்து விவசாயிகளுக்கு அதிக லாபமாகவும், மண்ணுக்கு பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்துவதால் விவசாயிகள் ஆர்வமுடம் சணல் சாகுபடி செய்து வருகின்றனர்.


Next Story