வாணாபுரம் பகுதியில் சாமந்திப்பூ பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் பகுதிகளில் சாமந்திப்பூ பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் பகுதிகளில் சாமந்திப்பூ பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
விவசாயம்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளை மையமாக கொண்டு 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. அந்த வகையில் கரும்பு, நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
தற்போது பனிக்காலம் என்பதால் பருவகால பயிர்களாக உளுந்து, காய்கறி பயிர்கள் மற்றும் பூக்கள் வகையான பயிர்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
தற்போது செடிகள் வளர்ந்து பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் பூக்களை திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, தானிப்பாடி, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பெரும்பாலும் பூக்கள் வகையான பயிர்களுக்கு அன்றைய தினம் மட்டுமே விலை நிர்ணயிக்கப்படுவதால் பூக்கள் பயிரிடப்படும் அதற்கான லாபகரமான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறைந்த விலைக்கு வாங்கி...
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பனிப்பொழிவின் காரணமாக பூக்கள் வகையான பயிர்களை பயிரிட்டு பராமரித்து வருகிறோம். பண்டிகை காலங்களில் கிலோ 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. சில வியாபாரிகள் நேரடியாக விவசாய நிலங்களுக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். எதிர்பார்த்த அளவு விலை நிர்ணயிக்கப்படுவதில்லை.
எனவே, இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் திருவண்ணாமலையில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு கொண்டு செல்கிறோம். ஆனால் அங்கு மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே, எங்கள் பகுதியில் பயிரிடப்படும் பூக்களை கொள்முதல் செய்யும் அளவிற்கு அரசு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.