ஆயக்குடி அருகே எந்திரம் மூலம் கரும்பு வெட்டும் பணியில் விவசாயிகள் ஆர்வம்
ஆயக்குடி அருகே எந்திரம் மூலம் கரும்பு வெட்டும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆயக்குடி அருகே எந்திரம் மூலம் கரும்பு வெட்டும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரும்பு சாகுபடி
பழனியை அடுத்த பாலசமுத்திரம், கரடிக்கூட்டம், கோம்பைபட்டி பகுதிகளில் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள விவசாயிகள் கால்வாய் தண்ணீர் மற்றும் கிணற்று நீரை பயன்படுத்தி கரும்பு சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும் கரும்புகளை வெட்டி சர்க்கரை ஆலைக்கும், வெல்ல தயாரிப்பு மண்டிக்கும் அனுப்புகின்றனர்.
இதில் கரும்பு வெட்டுவதற்காக விழுப்புரம், அரியலூர், தர்மபுரி பகுதிகளில் இருந்துதான் தொழிலாளர்கள் வருகின்றனர். இந்தநிலையில் கரும்பு வெட்டும் பணிக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் கோம்பைப்பட்டி பகுதியில் எந்திரம் மூலம் கரும்பு வெட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் செலவு குறைவதாகவும், விரைவாக கரும்பு வெட்டி முடிக்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எந்திரம் மூலம்...
இதுகுறித்து விவசாயி மோகன் கூறுகையில், "பழனி சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு வெட்டுவதற்கு வெளியூரில் இருந்தே தொழிலாளர்கள் வருகின்றனர். ஒரு டன் கரும்பு வெட்ட ரூ.1,500 கூலி கொடுக்க வேண்டி உள்ளது. அதோடு அவர்களுக்கான தங்குமிடம், சாப்பாடு போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் பரப்பை ஆட்கள் வெட்டுவதற்கு 2 நாட்கள் தேவைப்படும். தற்போது கரும்பு வெட்டுவதற்கு போதிய ஆட்களும் கிடைப்பதில்லை. இதற்கிடையே அமராவதி சர்க்கரை ஆலை மூலம் கரும்பு வெட்ட எந்திரம் கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் தற்போது எங்கள் பகுதியில் கரும்பு வெட்டும் பணி மேற்கொள்கிறோம். எந்திரம் மூலம் ஒரு டன் கரும்பு வெட்ட ரூ.800 மட்டுமே செலவாகிறது. மேலும் ஒரு ஏக்கர் வயலை 1½ மணி நேரத்துக்குள் வெட்டி முடிக்கப்படுகிறது. இதனால் வெட்டுக்கூலி செலவு குறைவதோடு, விரைவாக கரும்பு வெட்டி முடிக்கப்படுகிறது. தற்போதைய சூழல் விவசாயத்தில் எந்திர பயன்பாடு மிகவும் அவசியமாக உள்ளது" என்றார்.