ஊடுபயிராக கேரட் பயிரிட விவசாயிகள் ஆர்வம்


ஊடுபயிராக கேரட் பயிரிட விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் மேரக்காய் பந்தல்களில், ஊடுபயிராக கேரட் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் மேரக்காய் பந்தல்களில், ஊடுபயிராக கேரட் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேரக்காய் பந்தல்கள்

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கேரட், பீட்ரூட், உருளைகிழங்கு, முள்ளங்கி, காலிபிளவர், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக மிளிதேன், எரிசிபெட்டா, நெடுகுளா, இந்திரா நகர், வா.ஊ.சி. நகர், ஓடேன் துறை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் பயிரிடப்பட்டு உள்ளது. மேரக்காய் சாகுபடி செய்வதற்காக பல லட்சம் செலவில் பந்தல்கள் அமைத்து உள்ளனர்.

கடந்த பல மாதங்களாக தொடர் மழை பெய்ததாலும், நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததாலும் மேரக்காய் கொடிகள் காய்ந்து வீணாகியது. இதையடுத்து விவசாயிகள் காய்ந்த கொடிகளை அகற்றி, புதியதாக மேரக்காய் நாற்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இந்த நாற்றுகள் வளர்ந்து பலனளிக்க மேலும் சில மாதங்கள் ஆகும் என்பதால், அதே பந்தல்களில் ஊடு பயிராக ேகரட்டு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செலவு குறைகிறது

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மேரக்காய் பயிரிடுவதற்காக பந்தல்கள் அமைக்க கூடுதல் செலவாகிறது. மேரக்காய் நாற்றுகளை குறிப்பிட்ட இடைவெளியில் நட்டு பராமரித்து வருகிறோம். இவை வளர்ந்து காய்கள் காய்க்க சில மாதங்கள் ஆகும் என்பதாலும், விளைநிலத்தின் தரைப்பகுதி காலியாக இருப்பதாலும், கேரட்டை ஊடுபயிராக பயிரிட்டு உள்ளோம். மேரக்காய் மற்றும் கேரட் பயிர்களை ஒரே நேரத்தில், ஒரே விளைநிலத்தில் பயிரிட முடிகிறது. இதனால் செலவும் குறைகிறது. மேலும் மேரக்காய்கள் காய்க்க தொடங்கும் நேரத்தில், கேரட் அறுவடைக்கு தயாராகி விடும். இதனால் ஏதாவது ஒரு காய்கறிக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும் மற்ற காய்கறியின் மூலம் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என்றனர்.


Next Story