மத்திய பட்ஜெட் நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்
உரம், உணவு மானியத்தை குறைத்ததாக கூறி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் மத்திய பட்ஜெட் நகலை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கவில்லை. மேலும் உர மானியம், உணவு மானியம் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் ஆகியவற்றுக்கு குறைவான நிதி ஒதுக்கியதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியது. எனவே மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது.அதன்படி திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் சரத்குமார், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்ஜெட் நகல் எரிப்பு
இந்த போராட்டத்தின் போது மத்திய அரசின் பட்ஜெட் நகலை தீ வைத்து எரித்தபடி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். உடனே பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் பட்ஜெட் நகலை பறித்தனர். இதற்கு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் போலீசார் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள் தலைமையில் சாணார்பட்டியிலும், மாவட்ட தலைவர் வசந்தாமணி தலைமையில் ரெட்டியார்சத்திரத்திலும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 இடங்களில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
பழனியில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமையில் போராட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தின்போது, மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி குறைப்பை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.