கரும்பு நிலுவை தொகை வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் கடலூரில் பரபரப்பு
கரும்பு நிலுவை தொகை வழங்க வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் பெயரில் கடன்
கடலூர் மாவட்டம் எ.சித்தூரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை திவாலானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த ஆலையை மற்றொரு நிறுவனம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் பெயரில் வங்கியில் பெறப்பட்ட ரூ.40 கோடி கடன் தொகையை அந்த நிறுவனம் ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அந்த சர்க்கரை ஆலைக்கு கரும்பு கொடுத்த, பல்வேறு விவசாயிகள் பெயரில் கடன் இருப்பதாகவும், அவர்களுக்கு வேறு வங்கியில் கடன் வழங்க மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலை வாங்கிய கடனுக்கு, தற்போது விவசாயிகள் கடனை திரும்ப செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கரும்பு நிலுவை தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட திட்டக்குடி, வேப்பூர், எ.சித்தூர் உள்ளிட்ட சுமார் 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்காக ஒன்று திரண்டு வந்தனர்.
தர்ணா போராட்டம்
விவசாயிகள் திரண்டு வருவதை பார்த்த போலீசார் பேரி கார்டு மூலம் தடுப்புகள் ஏற்படுத்தினர். பின்னர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் கூறுகையில், விவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலை வாங்கிய கடன் தொகையை, அந்த சர்க்கரை ஆலையை வாங்கிய நிறுவனமே ஏற்க வேண்டும். மேலும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி சர்க்கரை ஆலைக்கு வழங்கிய 2.80 லட்சம் டன் கரும்புக்கு, டன் ஒன்றுக்கு ரூ.2,700 வீதம் ரூ.115 கோடி பாக்கி உள்ளது. ஆனால், டன்னுக்கு ரூ.300 மட்டுமே தரப்படும் என அந்த நிறுவனம் கூறி வருகிறது.
கடனை ஏற்க வேண்டும்
எனவே, விவசாயிகள் பெயரில் வாங்கப்பட்ட வங்கி கடனை நிறுவனம் முழுமையாக ஏற்க வேண்டும். கரும்பு நிலுவை ரூ.115 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார், 3 பேர் மட்டும் கலெக்டரை நேரில் பார்த்து மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட 3 விவசாயிகள் மட்டும் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது அவர் கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலை வாங்கிய கடனை, புதிதாக வாங்கிய நிறுவனம் ஏற்க வேண்டும். கரும்பு நிலுவை தொகையை முழுமையாக வழங்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வந்த ரூ.6 ஆயிரம் தொகை தற்போது அனைவருக்கும் கிடைப்பதில்லை. விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.