மண் லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
சட்டப்பாறை பகுதியில் இருந்து மண் அள்ளி வந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனியை அடுத்த ஆயக்குடி, சட்டப்பாறை பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் மண் அள்ளி லாரிகளில் ஏற்றி செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் பழனி, ஆயக்குடி பகுதியில் வரையறை இன்றி மண் அள்ளுவதாகவும், பல லாரிகள் அனுமதி இன்றி இயக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சட்டப்பாறை பகுதியில் இருந்து மண் அள்ளி வந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகளை ஆயக்குடி கொய்யா மார்க்கெட் பகுதியில் வைத்து விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், சட்டப்பாறை பகுதியில் மண் அள்ளி வரும் பல லாரிகளுக்கு உரிமம் இல்லை. மேலும் இந்த மண் லாரிகள் சட்டப்பாறை-ஆயக்குடி சாலையில் அதிவேகத்தில் செல்வதால் கொய்யா பறித்து வரும் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். இதுமட்டுமின்றி ஆயக்குடி-சட்டப்பாறை சாலை மட்டுமின்றி அங்குள்ள பாலங்கள் சேதம் அடைந்து வருகிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து அனுமதி பெறாத லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார், வருவாய்த்துறையினர் உறுதி அளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.