பழனியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது


பழனியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
x

பழனியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பழனி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு புதுதாராபுரம் சாலையில் காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். போராட்டத்தில் சங்கத்தினர் மற்றும் பெரியம்மாபட்டி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது, பழனி அருகே பெரியம்மாபட்டி பகுதியில் உச்சவரம்பு சட்டத்தில் வழங்கப்பட்ட விளைநிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக கோரிக்கை வைத்தும் வருவாய்த்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கோஷம் எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, பழனி துணை சூப்பிரண்டு சிவசக்தி, இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றினர். முன்னதாக விவசாயிகள் சிலர் பஸ்சில் ஏற மறுத்ததால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், குண்டுக்கட்டாக விவசாயிகளை பஸ்சில் ஏற்றினர். பின்னர் அவர்கள் பழனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக புதுதாராபுரம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story