18 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், நல்லேறு பூட்டி விவசாய பணிகளை தொடங்கினர்


சித்திரை மாத பிறப்பையொட்டி தஞ்சை அருகே 18 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நல்லேறு பூட்டி விவசாய பணிகளை தொடங்கினர்

தஞ்சாவூர்

வல்லம்:

சித்திரை மாத பிறப்பையொட்டி தஞ்சை அருகே 18 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நல்லேறு பூட்டி விவசாய பணிகளை தொடங்கினர்.

சித்திரை மாதம்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வர் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க தொழில்களில் எல்லாம் சிறந்த தொழிலாக வேளாண் தொழில் விளங்குகிறது. தமிழகத்தில் மன்னர்கள் காலத்தில் தங்க ஏர் பூட்டி உழுது விவசாய பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் சித்திரை மாத தொடக்கத்தில் நல்லேறு பூட்டி விவசாய பணிகளைத் தொடங்குவது வழக்கமாகும்.

நல்லேறு பூட்டி விவசாய பணிகள் தொடக்கம்

அதன்படி இந்த ஆண்டு சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று விவசாய பணிகளை விவசாயிகள் நல்லேறு பூட்டி உழுது தொடங்கினர். தஞ்சை அருகே செல்லப்பன் பேட்டையில் முன்னையம்பட்டி, ஆவாரம்பட்டி, புதுப்பட்டி, மனையடிப்பட்டி, செங்கிப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை நல்லேறு பூட்டி கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து நிலத்தில் ஒரே நாளில் கிராம மக்கள் ஒன்று திரண்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழிபாடு செய்து மாடுகளை ஏர்பூட்டி வயலில் உழுவு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் விளைநிலங்களில் நெல்மணிகளை தூவினர்.

முப்போக நெல் சாகுபடி

இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை சம்பா,தாளடி என முப்போக நெல் சாகுபடி நடைபெற வேண்டும். இதேபோல் கரும்பு, எள், வாழை,பருத்தி, கடலை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story