வருசநாடு கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்


வருசநாடு கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பயிர் கடன் தள்ளுபடி செய்ய கோரி வருசநாடு கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தேனி

பயிர் கடன் தள்ளுபடி

தேனி மாவட்டம் வருசநாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடிக்கு வருசநாடு கூட்டுறவு சங்கத்தில் 627 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 300 பயனாளிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீதம் உள்ள 327 பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

கூட்டுறவு சங்கம் முற்றுகை

இந்த நிலையில் பயிர் கடனை தள்ளுபடி செய்ய கோரி வருசநாடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்காத கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வருசநாடு போலீசார் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் அங்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் அனைவருக்கும் பயிர் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story