மன்னார்குடியில் 2-வது நாளாக விவசாயிகள் சாலைமறியல்


மன்னார்குடியில் 2-வது நாளாக விவசாயிகள் சாலைமறியல்
x

மன்னார்குடியில் 2-வது நாளாக விவசாயிகள் சாலைமறியல்

திருவாரூர்

பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கக்கோரி மன்னார்குடியில் நேற்று 2-வது நாளாக விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் நடுவே அடுப்பு வைத்து பொங்கல் வைத்தனர்.

அறிவிப்பு இல்லை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை, மேல நாகை, மேலவாசல், சாரிக்கோட்டை மற்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட எல்லை பகுதிகளான பேரையூர், கருவாக்குறிச்சி, காஞ்சி குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்காக விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முழு கரும்பு ஒன்றும் வழங்கியது. இதனால் கரும்பு பயிரிடும் பரப்பு அந்த பகுதியில் அதிகரித்தது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு வருமானமும் அதிகரித்தது. இதனால் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல்லுக்கு மாற்று பயிராக பொங்கல் கரும்பை பயிரிட்டனர். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக சர்க்கரை, பச்சரிசி மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆனால் கரும்பு பற்றிய எந்த அறிவிப்பும் இல்ைல. இதனால் தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

2-வது நாளாக சாலைமறியல்

இதனால் பொங்கல் பரிசாக கரும்பையும் சேர்ப்பது குறித்து மறு பரிசீலனை செய்து பொங்கல் கரும்பை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் மன்னார்குடி காளவாய்கரை பகுதியில் கரும்பு விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக நெடுவாக்கோட்டை கிராமத்தில் மன்னார்குடி- தஞ்சை சாலையில் கரும்பு விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது சாலையின் நடுவே அடுப்பு வைத்து பொங்கல் வைத்து விவசாயிகள் கோரிக்்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மாபெரும் போராட்டம் நடத்தப்படும்

தங்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை எனில் கரும்பு விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் மன்னார்குடி- தஞ்சை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மன்னார்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story