குறைந்த உயரத்தில் பாலம் கட்டுவதை கண்டித்து செஞ்சியில், விவசாயிகள் சாலை மறியல்


குறைந்த உயரத்தில் பாலம் கட்டுவதை கண்டித்து செஞ்சியில், விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த உயரத்தில் பாலம் கட்டுவதை கண்டித்து செஞ்சியில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

செஞ்சி,

புதுச்சேரி-கிருஷ்ணகிரி சாலையில் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக செஞ்சியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. அந்த புறவழிச்சாலையில் செஞ்சியில் இருந்து சிங்கவரம் சாலை குறுக்கே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மேம்பாலம் 5 மீட்டர் உயரத்தில் குறைந்த அளவில் கட்டப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் 5 மீட்டர் உயரத்துக்கு மேல் கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்கள் இந்த பாலத்தின் கீழ் வழியாக செல்வதற்கு உகந்ததாக இருக்காது. எனவே உயரத்தை 7 மீட்டராக வைத்து பாலத்தை கட்ட வேண்டும் என பா.ஜ.க.வினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தொடர்ந்து 5 மீட்டர் உயரத்திலேயே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. செஞ்சி ஒன்றிய தலைவர் தங்கராமு, மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஏழுமலை, நிர்வாகிகள் சந்திரசேகர், சிங்கவரம், விவசாயிகள் சுந்தரம், சரவணன், குமார், செல்வம் உள்பட ஏராளமானோர் நேற்று மதியம் செஞ்சியில் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இதுகுறித்து சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதையேற்ற விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Next Story