கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் வாகனத்தை விவசாயிகள் முற்றுகை


கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் வாகனத்தை விவசாயிகள் முற்றுகை
x

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி, ஜூன்.4-

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில் தமிழ்நாடு பாரதீய கிசான் சங்க மாநில செயலாளர் வீரசேகரன் கொடுத்த மனுவில், அரசு விதைப்பண்ைணயில் விதைநெல் மூட்டைகள் 50 கிலோ உள்ளது. இதனை 20 கிலோ மூட்டைகளில் மட்டுமே தர வேண்டும். கடன் பெறா விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உரம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

தூர்வார கோரிக்கை

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் கொடுத்த மனுவில், உய்யக்கொண்டான் வாய்க்காலில் தற்போது, தூர்வாரும் பணி நடந்து வருகிறது. குறுவை சாகுபடி செய்ய கடைமடை வரை காவிரி நீர் தடையின்றி செல்ல உறுதி செய்ய வேண்டும், செப்டம்பர், அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தண்ணீரை சேமிக்க ஏரி, குளங்களை தூரவார வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேப்போல தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கொடுத்த மனுவில், வாழையை சூறாவளி காற்றில் இருந்து காப்பாற்ற விவசாயிகளுக்கு சவுக்கு கம்பு வாங்க கடன் வழங்க வேண்டும். லாரியில் மணல் அள்ள அனுமதிக்க கூடாது. தனியார் வங்கிகளில் கடன் தொகையை கட்டியதும் நகைகளை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் அரியமங்கலம் ஒட்டக்குடி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு அரியமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒருவருடமாகியும் பயிர்கடன் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஜெயராமன் வாகனத்தின் முன்பு அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தரையில் படுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாகனத்தின் முன்பக்க டயரின் காற்றை பிடிங்கி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story