பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்க வில்லை என்று கூறி விவசாயிகள் சாலை மறியல்


பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்க வில்லை என்று கூறி விவசாயிகள் சாலை மறியல்
x

திருவாரூரில் பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்க வில்லை என்று கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருவாரூரில் பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்க வில்லை என்று கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 16 ஆயிரத்து எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.12,129 மதிப்பில் விவசாயிகள் மறைமுக ஏலம் மூலம் பருத்தி விற்பனை செய்துள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 785 குவிண்டால் பருத்தி மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த மறைமுக ஏலத்தில் பருத்திக்கு உரிய விலை நிர்ணயக்கவில்லை என்றும், சென்ற வாரம் கிலோ ரூ.120-க்கு எடுக்கப்பட்ட பருத்தி தற்போது ரூ.60-க்கு எடுக்கப்படுவதாக கூறி திருவாரூர்-நாகை புறவழிச்சாலையில் விவசாயிகள் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரத்து செய்ய வேண்டும்

அதனை தொடர்ந்து விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தில் நுழைந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இன்று (அதாவது நேற்று) நடைபெற்ற பருத்தி ஏலத்தை ரத்து செய்து நாளை (அதாவது இன்று) புதியதாக அதிக விலைக்கு பருத்தியை எடுக்க வேண்டும் எனவும், எலக்ட்ரானிக் தராசு மூலம் பருத்தினை எடை போட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தினால் தஞ்சை-நாகை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story