திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சாலை மறியல்


திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 July 2023 1:00 AM IST (Updated: 9 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டியில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

சாலை மறியல்

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்துக்கு முழுமையாக வந்து சேராத காரணத்தினால் நெற்பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் அனைத்து ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கு உரிய தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேகதாது அணை கட்ட மத்திய மந்திரியிடம் அனுமதி கோரிய கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரை கண்டித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் அருகே மாங்குடி கடைவீதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு சங்க மாநில தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் தியாகராஜன், இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் புலிகேசி, செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சாலை மறியல் காரணமாக திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகில் நடந்த சாலை மறியலில் சங்க ஒன்றிய தலைவர் சந்திரன், ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் கேசவராஜ், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மன்னார்குடி

அதேபோல் காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வலியுறுத்தி மன்னார்குடி கீழப்பாலத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்வராஜ் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சதாசிவம், ராஜேந்திரன், கலியபெருமாள், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். மறியல் காரணமாக மன்னார்குடி-திருவாரூர்-திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை வழித்தடத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story