பயிர் காப்பீட்டு தொகை குறித்த முத்தரப்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
திருவண்ணாமலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு தொகை குறித்த முத்தரப்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு தொகை குறித்த முத்தரப்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தரப்பு கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த விவசாயிகள், அரசு அலுவலர்கள், பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்ட முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 2021 - 2022 மற்றும் 2022- 2023-ம் நிதி ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு வேளாண்துறை, புள்ளியியல் துறை, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முறையாக ஆய்வு செய்து கணக்கீடு செய்யாமல் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மறுப்பதாகவும், கணக்கெடுப்பு செய்யப்பட்ட விவசாய நிலங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்காமல் அலைக்கழித்து வருவதாகவும், வேளாண் துறை அதிகாரிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு துணை போவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
தர்ணா போராட்டம்
மேலும் அவர்கள் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் மற்றும் ஆய்வு குறித்த புள்ளி விவரங்களை விவசாயிகள் கேட்டறிந்தனர். அதற்கு அதிகாரிகள் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து விவசாயிகள் முத்தரப்பு கூட்டத்தை புறக்கணித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து இன்சூரன்ஸ் இழப்பீடுத் தொகையை முறையாக வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.