அரசு மானியத்தில் புல்வெட்டும் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


அரசு மானியத்தில் புல்வெட்டும் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

தஞ்சை மாவட்டத்தில் புல்வெட்டும் கருவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறி உள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் புல்வெட்டும் கருவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புல் வெட்டும் கருவி

கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 65 முதல் 70 சதவீதம் தீவனத்திற்காகவே செலவாகிறது. தீவன தேவை மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது எனவே தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

50 சதவீதம் மானியம்

தஞ்சை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மின்சாரம் மூலம் இயங்கும் புல்வெட்டும் கருவிகள் 30 எண்ணிக்கை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படஉள்ளது. பயனாளிகள் தேர்வின்போது இதர கிராம பயனாளிகளுடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளி குறைந்தபட்சம் 2 கால்நடைகள் வைத்திருக்க வேண்டும்.

ஒரு புல்நறுக்கும் கருவிக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் (புல்நறுக்கும் கருவியின் மொத்த தொகை ரூ.32 ஆயிரம் ஆகும்) அரசால் மானியமாக ரூ.16 ஆயிரம் நிறுவனத்திற்கு வழங்கப்படும். மீதமுள்ள ரூ.16 ஆயிரத்தை (ஜி.எஸ்.டி., உள்பட) பயனாளிகளின் பங்களிப்பு தொகை வழங்கிட விருப்பம் உள்ளவராக இருத்தல் அவசியம்.

சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளி இதற்கு முன் இது போன்று மானியத்தில் புல் வெட்டும் கருவிகள் பெற்றிருத்தல் கூடாது. விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (30 சிறு, குறு சதவீதம்) விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, உதவி மருத்துவரை அணுகலாம்

கால்நடைகளுக்கு தீப பற்றாக்குறையை போக்க தீவன அபிவிருத்தி திட்டத்தை கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி உள்ளது. 100 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும்வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட மர பழத்தோட்டத்தில் அரை ஏக்கர் முதல் 1 ஏக்கர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு 3 ஆண்டுகாலம்வரை பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டமும் செயல்படுத்தபட உள்ளது.

30-ந்தேதி கடைசிநாள்

இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள்.

எனவே தகுதி வாய்ந்தவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story