சம்பா நெற்பயிருக்கு காப்பீடு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
சம்பா நெற்பயிருக்கு காப்பீடு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
சம்பா நெற்பயிருக்கு காப்பீடு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நாகை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சம்பா நெற்பயிருக்கு காப்பீடு
நாகை மாவட்டத்தில் நடப்பு பருவ நெற்பயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பிரதமரின் திருத்திய பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்துக்கான பயிர்க்காப்பீட்டை இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஏற்றுள்ளது. ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிருக்கான அதிகபட்ச காப்பீடுத்தொகை ரூ.33 ஆயிரத்து 767 ஆகும். இதன்படி விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய பயிர்க்காப்பீடு பிரீமியம் ரூ.506.51 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பா நெற்பயிருக்கு காப்பீடு பெற விரும்பும் விவசாயிகள், விண்ணப்பம் மற்றும் முன்மொழிவு படிவம், வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க பிரதி, ஆதார் அட்டை ஜெராக்ஸ், சிட்டா, அடங்கல் ஆவணம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் அடுத்தமாதம் (நவம்பர்) 15-ந்தேதிக்குள் பிரீமியத்தை செலுத்தி, பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.
விண்ணப்பிக்கலாம்
வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுவிட்டால், அதன் பின்னர் பயிர்க்காப்பீடு செய்ய இயலாது. எனவே விவசாயிகள் உடனடியாக சம்பா நெற் பயிருக்கு காப்பீடு பெற விண்ணப்பிக்குமாறும், பதிவு செய்தவுடன் விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் (நெல்- II), சாகுபடி பரப்பு மற்றும் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்து காப்பீடு செய்த ரசீதை உடன் பெற்று கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.