உர மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தலைஞாயிறு பகுதி விவசாயிகள் உர மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா கூறினார்.
தலைஞாயிறு பகுதி விவசாயிகள் உர மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதை, உரம்
தலைஞாயிறு வட்டாரத்தில் குறுவை சாகுபடி நடந்து வருகிறது. இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் சென்ற ஆண்டடைவிட கூடுதலாக குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் தலைஞாயிறு, நீர்முளை, பனங்காடி, கொத்தங்குடி ஆகிய இடங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு முழுவதும் மானியமாக ஒரு மூட்டை யூரியா, ஒரு முட்டை டி.ஏ.பி., அரை மூட்டை பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் நிலவரம்பு ஒரு ஏக்கர் ஆகும்.
திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் எண், சிட்டா, அடங்கல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். மேலும் உர மானியம் பெற உதவி வேளாண்மை அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
300 டன் விதை
சம்பா சாகுபடிக்கு நீண்டகால, மத்திய கால ரகங்கள் 300 டன் விதை நெல் மற்றும் உயிர் உரங்கள் இருப்பில் உள்ளது. இதை விவசாயிகள் 50 சதவித மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.