தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 2022-23-ம் நிதியாண்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களில் உயர் விளைச்சல் தரும் காய்கறிகள், முந்திரி, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி ஆகிய பயிர்களின் பரப்பு அதிகரித்தல், அங்கக பண்ணையம், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பசுமை குடில், நிழல்வலை குடில் அமைத்தல், சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு அறை அமைத்தல், துல்லிய பண்ணையத்திட்டம், உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டம், வாழையில் ஊடுபயிராக காய்கறிகள், நெகிழி கூடைகள், அலுமினிய ஏணிகள், வலைக்கருவி, முகப்பு விளக்கு, கவாத்து கத்திரிகோல், தெளிப்பான் (8-12 லிட்டர்), இனகவர்ச்சி பொறி, மஞ்சள் ஒட்டு பொறி, சொட்டுநீர் பாசனம் அமைத்தல் போன்றவற்றுக்கு நடப்பு நிதியாண்டில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் இணைய தளம் வழியாக பதிவு செய்ய வேண்டும். இதற்காக http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளத்தில் உள்ள தோட்டக்கலை மானிய விண்ணப்பத்தில் விவசாயி பெயர் மற்றும் முகவரி, ஆதார் அட்டை எண், கிராமம், வட்டாரம், மாவட்டம் முதலான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்தவுடன் தங்களுக்கு தேவையான திட்டத்தை தேர்வு செய்தல் வேண்டும். அத்திட்டத்தில் உள்ள இனம், உப இனம், முன்மொழியப்பட்ட பயிர், தேவையான அளவு ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். விவசாயி புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்தவுடன் குறுஞ்செய்தி விவசாயியின் செல்போன் எண்ணிற்கு வந்தடையும். இணைய வழியில் பதிவு செய்ய தெரியாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story