வேளாண் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வேளாண் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு வேளாண்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
வேளாண் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு வேளாண்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
வேளாண் அடுக்கு திட்டம்
தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண் துறையால், வேளாண் அடுக்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்த மாதம் 1-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்திட கிராம நிர்வாக அலுவலர், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி தங்களின் ஆதார் எண், புகைப்படம், வங்கிக்கணக்கு எண் விவரம் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று கிரைன்ஸ் என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவேற்றம் செய்யும் போது நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயியின் விவரம் இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு வேளாண்மை- உழவர்நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் பொறியியல் துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், ஊரக வளர்ச்சித்துறை, விதை சான்றளிப்புத்துறை, மற்றும் சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைய பயன்படுத்தப்படுகிறது.
மேலும், கிரைன்ஸ் வலைதளத்தின் மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும். இது ஒற்றைசாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து துறை சார்ந்த திட்டங்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்
ஒவ்வொரு முறையும் அரசின் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ற பயன்களை அளிக்க முடியும்.
மேலும், நிதி திட்ட பலன்கள், ஆதார் எண் அடிப்படையில் நேரடி பணப்பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்குத் திட்டடத்தில் சேர்ந்து பயன்பெற ஆன்லைன் மூலம் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.