வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்
திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்தாவது:-
வேளாண் கண்காட்சி
தமிழக வேளாண்மைத் துறை மற்றும் உழவர் நலத்துறை விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த சட்டசபை கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில் வேளாண் பெருமக்கள் பயன்பெறும் பொருட்டு நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்புக்கூட்டு தொழில் நுட்பங்கள், கல்லுரி மாணவர்கள், பொது மக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் பயன்பெறும் வகையில் திருச்சியில் விவசாய கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி வருகிற 27, 28 மற்றும் 29 ஆகிய 3 நாட்கள் திருச்சியில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விவசாய கண்காட்சி நடக்கிறது.
இதில் வேளாண்மையை எளிமைப் படுத்தும் வகையில் நவீன தொழில் நுட்பங்கள், வருமானத்தை பெருக்குவதற்கான வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டு நுட்பங்கள், பாரம்பரியமிக்க மரபுசார் தொழில் நுட்பங்கள், ஏற்றுமதி வாய்புகள், வேளாண் விளைபொருட்களை பதப்படுத்தும் தொழில் நுட்பங்கள், வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில் நுட்பங்கள், நவீன வேளாண் எந்திரங்கள், பசுமை குடில் தொழில் நுட்பங்கள், பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் ரகங்கள், பாரம்பரிய மரபுசார் வேளாண் கருவிகள், பாரம்பரிய உணவு அரங்கங்கள், வேளாண் மானிய உதவிகள் பெற முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன.
பயன்பெறலாம்
எனவே திருப்பத்துர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தகவலுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.