மகசூலை அதிகரிக்க விவசாயிகள், மண் பரிசோதனை செய்து கொள்ளலாம்


மகசூலை அதிகரிக்க விவசாயிகள், மண் பரிசோதனை செய்து கொள்ளலாம்
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 7:35 AM IST)
t-max-icont-min-icon

மகசூலை அதிகரிக்க விவசாயிகள், மண் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்


மகசூலை அதிகரிக்க விவசாயிகள், மண் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மண் பரிசோதனை

ஒரு செடி செழுமையாக வளர்ந்து அதிக மகசூல் தரவேண்டுமென்றால் அதற்கு அடிப்படை மண் வளமாகும். மண்ணின் வளத்தையும் அதனினுள்ள சத்துக்களை அறிந்து அதற்கேற்றவாறு உரமிட்டு மண்ணின் வளத்தை காப்பதற்கும், உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெறுவதற்கும் மண் பரிசோதனை செய்தல் மிகவும் அவசியமாகும்.

விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்கு முன்னர் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை தெரிந்து கொள்ள வேண்டும். சமச்சீர் முறையில் உரமிடுவதற்கும், பிரச்சினைக்குரிய நிலங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்கும் மண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

மண்வள அட்டைகள்

அதன்படி தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க மண்வள அட்டை திட்டம் 2023-24-ம் ஆண்டின் கீழ் நாகை மாவட்டத்திலுள்ள 6 வட்டாரங்களிலும் - மண் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த மண் ஆய்வு செய்யப்பட்டு மண்வள அட்டைகள் பயிர் சாகுபடிக்கு முன்னதாக விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

பயிர்சாகுபடிக்கு முன்னதாகவும் மற்றும் தரிசு நிலங்களிலும் மண் மாதிரிகள் ஏக்கருக்கு குறைந்தபட்சம் 10 இடங்களில் சேகரித்து கால் பங்கீட்டு முறையில் அரை கிலோ அளவு ஈரப்பதம் இன்றி மாதிரியாக எடுத்து மண் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

மண்ணில் உள்ள பேரூட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகளின் அளவுகளும், நுண்ணூட்டச்சத்துக்களான இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு மற்றும் போரான் ஆகியவற்றின் அளவுகளும் பரிசோதனை செய்யப்படும். மேலும் கார மற்றும் அமில நிலை, உப்புகளின் நிலை, கரிம சத்துகளும் பரிசோதனை செய்யப்பட்டு உரிய பரிந்துரைகளுடன் மண்வள அட்டை வழங்கப்படுகின்றன.

ஆய்வு கட்டணம்

மண் ஆய்வு முடிவுப்படி பல்வேறு பயிர்களுக்கு ஒருங்கிணைந்த முறையில் ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் நீடித்த விளைச்சலை பெறமுடியும். ஒவ்வொரு வருடமும் மண் பரிசோதனை செய்து அதனடிப்படையில் உரமிடுவது சிறந்ததாகும். முடியாத பட்சத்தில் 3 வருடத்திற்கு ஒரு முறையாவது மண் பரிசோதனை செய்து அதனடிப்படையில் ஊட்டச்சத்தினை பயிர்களுக்கு அளிக்கலாம்.

விவசாயிகள் ரூ.20 ஆய்வு கட்டணமாக செலுத்தி தங்களது மண் மாதிரிகளுக்கான மண்வள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.

இதேபோல் பாசன நீரையும் விவசாயிகள் பரிசோதனை செய்து நீரின் தன்மைக்கேற்ப பயிர் தேர்வு செய்து பயன்பெறலாம். பாசன நீர் பரிசோதனை செய்வதற்கு ரூ.20 கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story