விவசாயிகள் வரப்பில் பயறுவகைகளை சாகுபடி செய்யலாம்
கூடுதல் வருமானத்துக்கும், பூச்சி மேலாண்மைக்கும் விவசாயிகள் வரப்பில் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்யலாம் என வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எம்.ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கூடுதல் வருமானத்துக்கும், பூச்சி மேலாண்மைக்கும் விவசாயிகள் வரப்பில் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்யலாம் என வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எம்.ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பூச்சி மேலாண்மை
தமிழ்நாட்டில் 93 சதவீத விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர். பலருடைய குறு நிலங்கள் ஒரே இடத்தில் இருக்கும்போது வரப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும். வரப்புகள் எல்லைகளை நிர்ணயிக்கவும், மண் அரிப்பை கட்டுப்படுத்தவும், நீர்ப்பாசனம் செய்வதற்கும் உதவிகரமாக உள்ளது. ஆனால் வரப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் சாகுபடி பரப்பினை குறைப்பதுடன் களைச் செடிகள் வளர்வதற்கும் வழி வகுக்கிறது.
எனவே வரப்புகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களின் பூச்சி மேலாண்மைக்கும், கூடுதல் வருமானத்திற்கும் வழி வகுக்கிறது.
அதிகப்படியாக சாகுபடி செய்யப்படும் நெல், அதிக வயதுடைய கரும்பு போன்ற பயிர்கள் சாகுபடியில் வரப்பில் பயிர் வளர்க்கலாம். அதன்படி பயறு வகை பயிர்களை வரப்பு பயிர்களாக வளர்க்கலாம். இப்பயிர்களால் ஈர்க்கப்படும் பொறி வண்டுகள் நெல் பயிரை தாக்கும் பூச்சிகளை உட்கொண்டு பாதிப்பை குறைக்கும். வரப்புகளில் களைச் செடிகளை கட்டுப்படுத்த உதவும். காற்றிலுள்ள வளிமண்டல தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்பட்டு மண் வளம் மேம்படுத்தப்படும். கூடுதல் வருமானம் கிடைக்க வழி வகுக்கும்.
வேளாண்மை விரிவாக்க மையம்
பயறு வகை பயிர்களை வரப்பு பயிர்களாக சாகுபடி செய்வதன் மூலம் குடும்பத்தின் புரதத் தேவையை பூர்த்தி செய்யலாம். 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 60 ரூபாய் வீதம் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். ஏக்கருக்கு 1 கிலோ 200 கிராம் பயறு விதைகள் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.