உழவன் செயலியில் மண் வளத்தினை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்


உழவன் செயலியில் மண் வளத்தினை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்
x

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் மண்வளம் என்ற புதிய இணையதளம் மூலம் விவசாயிகள் உழவன் செயலியில் மண் வளத்தினை அறிந்து கொள்ளலாம் என்று திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் மண்வளம் என்ற புதிய இணையதளம் மூலம் விவசாயிகள் உழவன் செயலியில் மண் வளத்தினை அறிந்து கொள்ளலாம் என்று திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

புதிய இணையதளம்

வேளாண்மையில் பயிர்களின் மகசூலை அதிகரிக்க மண்வளத்தின் பங்கு முக்கியமானது. மண்ணின் வளம் என்பது மண்ணின் தன்மை, கரிம அமில நிலை, தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்ட சத்துக்கள், இரும்பு மற்றும் மாங்கனீஸ் போன்ற நுண்ணூட்ட சத்துக்களின் அளவை குறிப்பதாகும்.

பயிர்களின் நீடித்த வளர்ச்சிக்குத் தேவையான தாவர சத்துக்களை வழங்குவதோடு உகந்த ரசாயன மற்றும் உயிரியல் சூழ்நிலையை ஏற்படுத்துவதில் மண்ணின் வளம் முக்கியமான காரணியாகும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மண்ணின் வளத்தை அறிந்து ஒவ்வொரு விவசாயியும் தங்கள் மண்ணிற்கு ஏற்ப உரமிடுவது மிகவும் அவசியமாகும்.

இதை கருத்தில் கொண்டு விளை நிலைங்களில் மண் வளத்தை மேம்படுத்தும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் http://tnagriculure.in/mannvalam/ தமிழ் மண்வளம் என்ற புதிய இணையதளம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் தங்கள் மண்ணின் ஊட்டச்சத்து விவரங்களையும், மண் வளத்தையும் தெரிந்து கொள்ளலாம். இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகளின் வருமான பெருகும்

விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்கள் நிலத்தின் புல எண் உட்பிரிவு எண் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்வதன் மூலம் உடனடியாக அந்த நிலத்தின் மண்வளம் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவிறக்கம் செய்யப்பட்டு மண்வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும்.

இந்த இணையதளத்தில் மண்டல வாரியாகவும், மாவட்டத்தில் உள்ள வட்டாரம் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் மண்ணின் வகைகள் தரப்பட்டு உள்ளன.

அதுமட்டுமின்றி மண்ணின் தன்மை, நிலத்தடி நீரின் வகைப்பாடு, உப்பின் நிலை, களர் அமில நிலை, அங்ககக் கரிமம், சுண்ணாம்புத் தன்மை போன்ற வேதியியல் குணங்கள் பற்றிய விவரங்களையும் பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களின் விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் எந்த வகை பயிர்களை சாகுபடி செய்யலாம், தேர்ந்தெடுக்கும் பயிர்களுக்கு எவ்வளவு உரமிட வேண்டும் போன்ற பரிந்துரைகளையும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எனவே திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் தமிழ் மண்வளம் என்ற குறியீட்டினை தேர்வு செய்து தங்கள் மண்ணின் வளத்தினை அறிந்து அதற்கு ஏற்ப உரமிடுவதால் சாகுபடி செலவு குறைந்து மண்வளம் காக்கப்பட்டு மகசூல் அதிகரிக்கும். இதனால் விவசாயிகளின் வருமானமும் பெருகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story