விவசாயிகள் மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


விவசாயிகள் மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x

விவசாயிகள் மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

விவசாயிகள் மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

சூரிய சக்தி பம்புசெட்டுகள்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணையாக 60 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் ரூ.1 கோடியே 30 லட்சத்து 95 ஆயிரம் மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள் நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருத்தல் வேண்டும்.

இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்திவரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இந்த திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்து கொள்ளலாம்.

உறுதிமொழி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்புகோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் முன்னுரிமையை துறக்கவேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தின் கீழ் சூரிய சக்தி பம்புசெட்டுகளை அமைக்க விரும்பும் விவசாயிகள், இலவச மின்இணைப்பு கோரி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

மேலும் பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு, இந்த திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட, வேளாண்மை பொறியியல்துறை உபகோட்டங்களில் விண்ணப்பம் அளிக்கும்போது சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும்.

தடையில்லா சான்று

வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீர்நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள், கான்கீரிட் காரை இடப்படாத கால்வாய்களில் இருந்து 50 மீட்டருக்குள், நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது.

மேற்கண்ட தொலைவிற்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணிதுறையிடம் இருந்து தடையில்லாச்சான்று பெறவேண்டும்.

மேற்படி தொலைவு வரம்பிற்குள் உள்ள நீர் ஆதாரங்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் போது பொதுப்பணித்துறையின் தடையில்லாசான்றினை இணைத்திட வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினை சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மானிய விலையில், தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மேலும் விவரங்களுக்கு 0424 2904843, 04285 290069 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும், pmkusum.tn.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story