சம்பா பருவத்திற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் அதிகாரி தகவல்
சம்பா பருவத்திற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு திட்டத்தினை நடைமுறைப்படுத்திட இப்கோ டோக்கியோ இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, சங்கராபுரம் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய உள்ள விவசாயிகள் நடப்பு பசலி 1432-ம் பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிருக்கு காப்பீட்டு தொகையாக ரூ.464 செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய அடுத்த மாதம்(நவம்பர்) 15-ந்தேதி கடைசி நாள் ஆகும். உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு ரூ.266 காப்பீட்டு தொகை செலுத்த வேண்டும். இதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 15-ம் தேதி ஆகும். எனவே விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீடு கட்டணம் செலுத்தி பயன்பெறலாம். கடன் பெறும் விவசாயிகளுக்கு அவர்களின் ஒப்புதலுடன் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் சங்கராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.